செவ்வாய், 18 மே, 2021

The Art of saying "No" - புறம் 196

 The Art of saying "No"

..................................

Art of saying "No"

இயன்றதும் இயலாததும்!

..........................................

புறநானூற்றுப் புலவன் ஆவூர் மூலங்கிழார் இன்றைக்கு நிர்வாகவியல், வாழ்வியல் நெறி பேசுகிறவர்கள் எல்லாம் உரைக்க முயலுகிற உயர் "ஆளுமை" பண்பைப் புறநானூறு பாடல் எண் 196ல் தெளிவாக உரைக்கிறார்.

பாண்டியன் நன்மாறனைப் புலவர் பரிசில் வேண்டிப் புகழ்ந்துரைக்கிறார். கேட்டிருந்த பாண்டியன் புலவருக்குப் பரிசு நல்காமல் ஏனோ காலம் கடத்துகிறான். புலவர் மூலங்கிழார் சினம் அடைகிறார். "ஆள்வினைப் பண்பை" எடுத்து ஓதுகிறார்.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;"

அதாவது ஒரு விடயம் முடியுமென்றால் முடியும் என்று உடன் செய்லாற்றலும் இயலாதென்றால் "முடியாது" என்று உடன் கூறிவிடுதலுமே "ஆள்வினைப் பண்பின்" வெளிப்பாடு!

முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கேட்டவனுக்கு வருத்தம் தருவது மட்டுமல்லாது முடிவெடுக்காது காலந் தாழ்த்தியவனுக்கும் கேடு விளைவிக்கும்.

"ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்"

முடியாததை முடிப்பேன் என்றலும், முடிந்ததை முடித்துக்கொடுக்காததும் ஒருவனுடைய புகழுக்கு இழுக்கு! அவனுடைய ஆளுமையின் குற்றம்.

அன்று இந்தக் குற்றம் எங்கும் எவரிடத்தும் இருந்ததில்லை என்பதைப் புலவர் கீழ்வருமாறு பதிவு செய்கிறார்.

"அனைத்தா கியர்  எனைத்தும்சேய்த்துக் காணாது கண்டனம்"

எந்த அரசரிடமும் இல்லாத ஆளுமைக் குற்றம் உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன். அது உன்னையும், உன் பிள்ளைகளையும், உன்னுடைய அரசாங்கத்தையும் பாதிக்கும். என்வே உன்னுடைய மக்கள் நன்றாக இருக்க, உன் எஞ்சிய நாட்கள் சிறப்பாக அமையப் பாண்டியனே உடனே "முடிவெடுத்து"  "இயன்றதற்கு"  உடன்பட்டு செயலாற்றி அப்பொழுதே நிறைவேற்று! இயலாதாயின் "இயலாது" என்பதினைக் கூறி உடனே மறுத்துவிடு. குலம் அழிக்கும் ஆள்வினைக் குறையான "நாநயக் குறையை" மாற்றிக்கொள்.

"அதனான் நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளி மறை "நாணலது" இல்லா கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே!"

பாடலில் புலவனின் பெருமிதம் நிறைவுப் பகுதியில் பதிவு செய்யப்படுகிறது. புலவன் கூறுகிறான்  "அரசனே நீ பரிசில் தராததால் நான் ஒன்றும் வெயிலிலும் பனியிலும் மடிந்துவிட மாட்டேன். எனக்கு வறுமை புதிதில்லை. வீசுகின்ற காற்றைத் தடுக்க வல்ல ஆனால் சரியான கூரையில்லாத என் வீட்டில் மங்கல நாண் அல்லது வேறு அணி அணிந்திராத என் மனைவியிடம் நான் செல்கிறேன். "நிறை காக்கும் காப்பு" என்னும் உள்ளதைக் கொண்டு நிறைவு காணும் அவள் குணம் எங்களைக் காக்கும்" 

புறநானுறு பாடல் 196.

ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் நன்மாறனைப் பாடியது.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்;

அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்

நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும் வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளிமறை நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே"

"இயன்றது என்றால் அந்த நொடியே செய்க; இல்லென்றால் உடனே இதமாக மறுத்துவிடுக!" 

வாழ்த்துகள்!சொ.வினைதீர்த்தான்



திங்கள், 17 மே, 2021

7 Habits of highly effective people பயனுறு பழக்ஜம் ஏழு!

 https://fb.watch/4pIJ2HrtBb/


https://www.facebook.com/watch/?v=488063992213102

Attention dear Friends :) 

.....................................

Talk on "Searching Stephen R.Covey in Tamil literature"

By Sri S.Vinaitheerthan

Soft skill Trainer,

Ardent Tamil lover


Kindly comment

https://www.facebook.com/watch/?v=488063992213102

இன்னாநாற்பது + இனியவை நாற்பது = நல்வாழ்வு.

 https://www.facebook.com/watch/?v=186939079899353

https://m.facebook.com/story.php?story_fbid=186939079899353&id=104531668272038


*இன்னா நாற்பது; இனியவை நாற்பது* நூல்கள் குறித்து என்னுடைய உரையின் (ரிக்கார்டிங்) பதிவுக் காணொளி.


கனிவுடன் கேட்டுக் கருத்து எழுதுங்கள்! நன்றி.

சொ.வினைதீர்த்தான்

#Mind_Your_Mind_80

இன்னா நாற்பது, இனியவை நாற்பது

(சங்க இலக்கியச் சிந்தனை) 

சிறப்புரை

Sri S.Vinaitheerthan B.Sc, F.I.I.I

Soft Skills Trainer and Motivational Speaker,

Divisional Manager (Rtd) L.I.C of India,

PG Gurukulam Trainer.

11th March 2021 - Thursday 7.30 PM IST

சென்னைப் பல்கலை - திருமுறை M.A படிப்பு நீக்கம்.

தமிழர்களின் ஆன்மீகச் சொத்தான #சைவ சித்தாந்தம் , #சிவாகமம் #பன்னிரு திருமுறைகள் ஆகியவற்றைக் கற்பிக்கும் பாடப்பிரிவுகள் சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படும் என இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது 


மாணவர் சேர்க்கை குறைவாக 

உள்ளது என்பதைக் காரணம் 

காட்டி இந்த முடிவைச் சென்னைப் 

பல்கலைக் கழகத் துணைவேந்தர் 

எஸ்.கௌரி என்பவர் அறிவித்துள்ளார். இந்த "கெளரி" அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தொழில் நுட்பப் பட்டதாரி. தமிழ், வரலாறு, வணிகம் , தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் தகுதி பெற்றவர்களே சென்னைப் பல்கலை கழகத் துணை வேந்தராக அமர்த்தப்படுவது மரபு.

ஆனால், ஒரு தொழில்நுட்பாளர்

துணை வேந்தராக அமர்த்தப்பட்டுள்ளார். அதுதான் இந்த அநீதியான முடிவுக்குகுக் காரணம்.


அல்லது யாருடைய ஆலோசனை என்பதும் தெரியவில்லை.


இதுகுறித்து அனைவரும்

கடும் கண்டனத்தைத் தெரிவித்துத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்தப் பாடப் பிரிவுகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்த  வேண்டும்


The University of Madras has 

suspended three postgraduate 

programmes, in view of reduced enrolment. The programmes are 

MA Saiva Siddhanta, Siva Agamas and Panniru Thirumurai classics.


The decisions were announced at the annual meeting of the 

University of Madras Senate on 

Saturday, By Vice-Chancellor S Gowri .


இந்து மதம் என்பதில் சைவம் சேர்ந்துதானே? எவரிடமிருந்தும் இந்தச் செய்தியைக் குறித்தும் பன்னிருதிருமுறை போன்ற படிப்புக்களை நீக்கக்கூடாது; ஒருவர் சேர்ந்திருந்தாலும் நடத்த வேண்டும் என்று எடுத்துக் கூறும் ஒரு பதிவையும் இதுவரை பார்க்கவில்லை. 


இன்று பல கிராமங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளது. இருந்தாலும் அப்பள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்படவில்லையா?


ஆர்வலர்கள் உடன் நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுக்க வேண்டும்!


சொ.வினைதீர்த்தான்

திருவாடானை கோவில் பதிவு, படங்கள்.

 https://m.facebook.com/story.php?story_fbid=982974488403291&id=100000722463448


திருவாடானை ஆலய தரிசனம் - பாடல்பெற்ற தலம்.

------------------------------------------வணக்கம். திருவாடானை அரசு கலைக்கல்லூரி மணிமேகலை காப்பியம் குறித்த பயிலரங்கில் உரையாற்றச்சென்றிருந்தபோது 23.3..2015 மாலை பாண்டியநாட்டில் பாடல்பெற்ற பதினான்கு கோவில்களில் ஒன்றாகிய ஆடானையப்பர் கோவிலில் வழிபட்டுவந்தேன். இராமநாதபுரம் சமத்தானத்தின் ஆளுகைக்குட்ட நகரத்தார் திருப்பணியான கோவில் குடமுழுக்கு காணவிருக்கிறது. அருமையான சிற்பத்தொகுதிகள் நிறைந்த 130 அடி ஒன்பதுநிலை கோபுரத்திற்கு வண்ணபூச்சு வேலை பூர்த்தியாகவிருக்கிறது.


1.ஆடானையப்பர், ஆதிரத்னேசுவரர், அஜகஜேசுவரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பெருமான் அழைத்த ஆதியான் உறை ஆடானை  என்ற பெயரிலேயே திருவாடானை என ஊர்ப்பெயர் பதிவாகியுள்ளது.


புராணக்கதை மிகவும் பொருள்பொதிந்தது. வருணன் மகன் வாருணி என்பான் துர்வாசமுனிவரின் வேள்விக்கு இடையூறு செய்துவிடுகிறான். கோபத்திற்கு பெயர்போன துர்வாசர் மரபுக்குப்பொருந்தாத செய்கை புரிந்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும்கொண்ட பொருந்தா உருவமடையுமாறு வாருணிக்குச் சாபம் அளித்துவிடுகிறார். ஆட்டின் வாயால் யானை உடலுக்கு ஏற்றவாறு உண்ணமுடியாமல் அவன் பசிப்பிணியடைகிறான். மணிமேகலை கதையில் வருகிற காயசண்டிகையும் கூட ஒரு முனிவர் உண்ண வைத்திருந்த அருங்கனியை அவர் குளிக்கச்சென்றிருந்தபோது சிதைத்துவிடுவதால் தீராப்பசி நோய்க்கு ஆளாகும்படி முனிவருடைய சாபத்தைப்பெறுகிறாள். பின்பு அமுதசுரபி உதவியால் அவள் பசிப்பிணியை பாரகம் அடங்கலும் பசிப்பிணி தீர்த்த பாவையாகிய மணிமேகலை போக்குகிறாள். இங்கு வாருணி சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெறுகிறான்.

ஒருவன் பொருந்தாத செய்கை செய்தால் என்ன நிகழும் என்பதை இத்தொன்மக் கதைகள் உணர்த்தும் செய்தியாக நான் மாணவர் பயிலரங்கில் பகிர்ந்துகொண்டேன். மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவருக்குப் பொருந்தாத செயலில் ஈடுபட்டால் துன்பப்படவேண்டும் என்பதை உணர்த்தினேன்.

 

2.முன் மண்டபம் வித்தாரமான கல்திருப்பணி. 108 தூண்கள். பெரும்பாலும் வடிவங்கள்,பூக்கள்,பறவைகள் என்ற வகையில் பலநூறு புடைப்புச்சிற்பங்கள். தூண்களின் வரிசையும் ஒழுங்கும் அத்தூண்கள் தாங்கும் கல்பலகைகளின் வேலைப்பாடும் கவர்வன. 


3.திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்துமூவர் பத்தியில் ஒவ்வொரு அடியாருக்கும் மேலே சுவரில் அவருடை வண்ணத்திருவுரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காணக்கிடைக்காதது.

4.ஆலமர்செல்வனின் மண்டபம் அழகான சிற்ப தூண்களுடன் கருங்கல் திருப்பணி.சனகாதி முனிவர்கள் நால்வரும் எதிரில் வரிசையில் அமர்ந்துள்ளனர்.


5.இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் “ஆசாரபக்தியுடன் ஞானாகமத்தையரு ளாடானை நித்தமுறை பெருமாளே” என்று ஞானம் பெற வழிகாட்டியவனெனத் தொழுகிறார்.

6.ஆதிரெத்னசுவரர் என்ற திருப்பெயருடனும் அழைக்கப்படுகிற சிறிய இலிங்கத் திருவுரு இரத்தினம்போல விளக்கொளியில் ஒளிவிடுகிறது.

7.செப்புத்திருமேனிகள் வெகு அழகு.


8.சுவாமியின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கி முன்மண்டபம், சுற்றுப்பத்தி என்று பரந்த தனிக்கோவிலில் அம்பிகை அன்பாயி, அன்பாயிரவல்லி, சினேகவல்லி என்ற திருபெயர்களோடு அருளாட்சி செய்கிறாள். வல்லி என்றாள் கொடி என்று பொருள். அன்பு,சினேகம் ஒரு கொடியாகத்தழுவினால் எவ்வளவு பேறு!


9.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை மலரால் அர்ச்சித்து மனதால் சிந்தித்து நாவால் அவன் புகழ்பாட வளமெல்லாம் பெருகும் என்பது உறுதியென திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார். “போதினார் புனைந்து ஏத்துவார்தமை வாதியா வினைமாயுமே” என்பதும் ”அங்கை யானுறை யாடானை நாதனை தன்கையால் தொழுதுஏத்தவல்லவர் மங்குநோய் பிணிமாயுமே” என்பதும் அவருடைய திருவாக்கு.

  

திருக்கோவில் படங்கள் பகிர்ந்துள்ளேன். பொறுமையுடன் சொடுக்கிப் பார்க்க வேண்டுகிறேன். நண்பர்கள் ஆதிரத்னேசுவரர் என்னும் ஆடானைஅப்பர், சினேகவல்லித்தாயார் அருள்பெற வாழ்த்துகிறேன். நன்றி.

தகவல் தொடர்பு - பன்மொழி திறன் - சாதுவன்

தகவல்தொடர்பு – பன்மொழியின் பயன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பல மொழிகள் தெரிந்துவைத்திருத்தல் உயிரையும் காக்கும் என்பதனை மணிமேகலை காப்பியத்தில் வருகிற ஒரு கிளைக்கதை உணர்த்துகிறது. உரையாடலில் Logic and Sequencing என்கிற கோர்வையாகவும் தர்க்க வாதச் சான்றுகளுடன் பேசுவது கொடியவர் மனத்தையும் மாற்றவல்லது என்பதனையும் இக்கதை காட்டுகிறது.


மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை என்னும் பெண்ணின் நல்லாளின் கணவன் சாதுவன் என்னும் வணிகன் ஆவான். அவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையுடன் சேர்ந்து வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டி விடுகிறாள். பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும் போகிறான்.


கடற்காற்றின் சீற்றத்தால் அவன் சென்ற கலம் சிதைகிறது. முறிந்த பலகை ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்து விடுகிறான் நாகர்கள் அவனைக் காண்கிறார்கள். அவன் ஊனைத் தின்னலாம் என்று நினைத்து “ஊன் உடை இவ்வுடம்பு உணவு” என்று அவனை எழுப்புகிறார்கள். 


சாதுவனுக்கு அவர்களுடைய மொழி விளங்குகிறது. “அவர் பாடை மயக்கு அறு மரபின்” கற்றனன் ஆதலின் அவர்களுடன் அவர்கள் மொழியில் உரையாடுகிறான். அவர்கள் அவனைத் தங்கள் குரு மகனிடம் கூட்டிச் செல்லுகிறார்கள். 


அங்கே கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போன்று (எண்கு தன் பிணவோடு இருந்ததுபோல) தோன்றுகிறது.


அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும், அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலைவன் தன் மக்களிடம் சொல்கிறான். அது வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான். நாகர் தலைவனோ, ”பெண்டிரும் உண்டியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் மக்களுக்கு வேறு என்ன பயன் உண்டு? உண்டானால் எங்களுக்குக் காட்டு” என்று கேட்கிறான். 

சாதுவன் மறுமொழியாக நல்லறம் என்றால் என்ன என்று எடுத்துச் சொல்கிறான்.


”மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்

கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்

அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டு” என உணர்த்துகிறான்.


சாதுவனின் ”நல்லறம்” பற்றிய பேச்சு நாகர் தலைவனுக்குப் பெரும் சிரிப்பைத் தருகிறது. எனவே அவன் சாதுவனிடம் கேட்கிறான்: ”உடம்பை விட்டு ஓடிப் போகும் உயிர் இன்னோர் உருவம் கொண்டு இன்னோர் உடம்பில் புகும் என்று சொன்னாய். அந்த உயிர் எப்படிப் போய்ப் புகும் என்று சொல்லு” சாதுவன் மறுமொழியாகக் கூறுகிறான்,


”உயிரோடு வாழும்போது உடலுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் உயிர் போனவுடன், அந்த உடம்பை வெட்டி, எரித்தாலும் அந்த உடலுக்கு உணர்ச்சியில்லை. அதனாலேயே அந்த உடம்பை விட்டு வெளியேறியது ஒன்று உண்டு என்று தெரிந்துகொள். உடம்பை இங்கேயே வைத்துவிட்டு உயிர் பல காவதம் செல்வதைக் கனவு காணும்போதுகூடத் தெரிந்துகொள்ளலாமே! அப்படித்தான், உடம்பை விட்டுப் போன உயிரும் தான் செய்த வினைக்கு ஏற்றபடி அமைந்த ஓர் உடம்பில் புகுகிறது. இதை நீ தெளிவாகத் தெரிந்துகொள்.” 


இப்படிச் சாதுவன் சொன்னதைக் கேட்ட நாகர் தலைவன் ”நல்லது அறிந்த அந்தச் செட்டி”யின் கால்களில் விழுந்து கேட்கிறான்: ”கள்ளையும் ஊனையும் தவிர்த்தால், இந்த உடம்பில் உள்ள உயிரைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. இறக்கும் வரை எங்களுக்கு ஏற்ற நல்லறத்தை எடுத்துச் சொல்லவேண்டும்” சாதுவன் அவர்களுக்கு ”முதுமை அடைந்து இறந்து போகும் விலங்குகளை” உண்ணுமாறு கூறி நல்ல வழியில் வாழ்வது எப்படி என்று சொல்கிறான்.


நாகர் தலைவன் நன்றி காட்டுகிறான். அவன் கொடுத்த பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான். இவ்வாறாகப் பல மொழிகள் கற்றுப் பிறர் மனங்கொள்ளுமாறு உரையாடுகிற திறனை வளர்த்துக் கொள்கிறபோது இன்னல் விலகி வாழ்வு சிறக்கிறது. 


இராமாயணம், மகாபாரதமட்டுமல்லாது நம் நாட்டில் எழுந்த பிற மரபுக் காப்பியங்களிலும், இலக்கியங்களிலும் பல்வேறு கிளைக்கதைகள், எடுத்துக்காட்டுகள், செய்திகள் நம்மை வழிநடத்தும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்.

மணிமேகலை - Maslow - தேவைக்கோட்பாடு!

மணிமேகலை காப்பியமும் தேவைக்கோட்பாடும்

>>>>>>>>>>>>>>>>>>>>

திருவாடானை அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘மணிமேகலை காப்பியத்தில் தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில் உரையாற்ற பேரா மு.பழநியப்பன் அவர்களால் வாய்ப்பமைந்தது. அதற்காக மணிமேகலை காப்பியத்தை முழுவதும் படித்தேன். மணிமேகலை வாழ்க்கையோடு ஆப்பிரகாம் மாஸ்லாவின் ‘தேவைக்கோட்பாடு’ கட்டமைப்பு பொருந்திப்போவதைக் கண்டேன். 

மாஸ்லா கூறும் தேவைகள்: 1.அடிப்படைத் தேவைகள் (Basic needs), 2.பாதுகாப்புத் தேவை (Security Need) 3.Companionship Need 4.Esteem Need 5.Self Actualization. ஒரு தேவை பூர்த்தியானதும் அடுத்த தேவைக்கு மனிதன் ஏங்குகிறான்; அடைய முயல்கிறான் என்பது அவருடைய உளவியல் கொள்கை.


இந்த அடிநிலைத் தேவைக்கட்டமைப்புச் சிந்தனைகளை மணிமேகலை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதல் அடிப்படைத்தேவையான (Basic Need) பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற மணிமேகலையின் எண்ணத்தின் வலுவானது அவள் கைகளில் அமுதசுரபியை மணிமேகலா தெய்வம், தீவதிலகை வழியாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.


தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அரசன் கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.


”ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”


உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.இவ்வாறு மனிதவாழ்வின் முதல் தேவையான பசிப்பிணியறுத்தல் குறித்துக் காப்பியம் பேசுகிறது.


மாதவி மணிமேகலைக்கு காட்டுகிற துறவறநெறி ஆடல் மகளிர் வாழ்க்கையை மணிமேகலை தவிர்க்க உதவும் பாதுகாப்பு (Security Need) அரணாகிறது.


அடுத்த தேவையான தோழமை (Companionship Need) குறித்துப் பார்க்கலாம். மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.


"புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 

இதுவே ஆயின் கெடுக தன் திறம்... "


என்று. அவ்வெண்ணெத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். 


அவள் கைகளில் அமுதசுரபி கிடைக்கிறது. “காணார், கேளார், கால்முடமானோர், பசிநோய் நோற்றார், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதி” என்று அருந்தியோர்க்கெல்லாம் ஆர் உயிர் மருந்தாய் பெருவளம் அமுதசுரபி வழியாக சுரந்து நல்குகிறாள் மணிமேகலை. ”பசிப்பிணி தீர்த்த பாவை”யாக யாவரும் போற்றுகிறார்கள். (ESTEEM NEED)


போற்றிய பின்னரும், யாவரும் அங்கீகரித்துக் கொண்டாடிய பின்னரும் மணிமேகலையின் தேவையடங்கவில்லை. அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை. 


அவள் தேவை உச்சபட்சத்தேவையான தன்னை அறிதல், தன் நோக்கம் அறிதல், அதனை அடைதல் (Self Actualization) என்பதிலேயே நிலை கொண்டிருக்கிறது அறவண அடிகளிடம் ”அடிகள் மெய்ப்பொருள் அருளுக” எனத் தருமம் கேட்கிறாள். புத்த சங்கத்தில் சரண் புகுகிறாள். இறுதியில் மனத்து இருள் நீங்க நோன்பு நோற்கிறாள். 


பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்று உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்.