ஞானத் தமிழ்!
யானே பெருந்தமிழன்; நல்லேன்; பெரிது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கூகுள் குழுமம் ஒன்றில் ஒரு அன்பர் ஒரு குறிப்பிட்ட மொழியினை ஞான மொழி, தேவ மொழி, அதுவே பாரத மொழி என்றெல்லாம் பலப்பட தொடர்ந்து எழுதி வருகிறார்.
அவருக்கு ஏழு கால் மூத்த, முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பூதத்தாழ்வருடைய திவ்வியப் பிரபந்த மொழி என்னுடைய நினைவிற்கு வந்தது.
தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்; வண்தமிழ்; ஒண்தமிழ்; கன்னித்தமிழ் என்று சிறப்புச் சொற்களைச் சேர்த்துச் சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழவர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.
ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக் கொண்டும் பெருமையடைகிறார்.
தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்க வல்லது. கற்றவரின் அறிவை நேர்மையான நெறியில் செலுத்தும் தன்மை தமிழுக்கு உண்டு. ஆதலால் ஞானத்தமிழ் என்கிறார்.
"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்புஉருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானசுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்"
அன்பும், அது ஈனும் ஆர்வமுடைமையும், நெகிழ்ந்து உருகுகிற சிந்தையையும் அளித்தது தமிழ். அதனால் நாரணற்கு ஞானஒளி விளக்கு என்னால் ஏற்ற முடிந்தது என்கிறார் ஆழ்வார் பெருமான்.
இக்கருத்துக்கு எழுபத்து நாலாம் பாடலில் மேலும் அசைக்க முடியாத உறுதி சேர்க்கிறார் பூதத்தாழ்வார். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற தமிழ்விடு தூது ஆசிரியருக்கு வழிகாட்டியாக “இருந்தமிழ்” என்ற சொல்லாட்சியும் “பெருந்தமிழன் யானே” என்ற மட்டிலாப் பெருமையையும் இப்பாடலில் காணக் கிடைக்கின்றன.
“யானேதவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”
”நானே சிறந்த தமிழன்; தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன்; தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். ஒப்பற்ற தமிழிலே நல்ல பாமலை உன் திருவடிகளிலே சூடத்தக்கதாகக் கூறினேன்” என்பதே இப்படலின் பொருள் அல்லவா!
திருமால் நெறியோடு இவ்விரு பாடல்கள் நமக்குத் தருகின்ற வாழ்வியல் அறிவுரை, ”தமிழை விரும்பிப்படியுங்கள்; அறிவு பெறலாம்! தமிழர் பண்பாட்டினை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழலாம்! நல்ல மனிதனாகவும் வாழலாம்!” என்பதே.
"ஞானத் தமிழ் புரிந்த யானே பெருந்தமிழன்; நல்லேன்’ என்று ஆழவார் கூறும் பெருமிதம் நெஞ்சைக்கவர்கிறது. எல்லோரும் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியுமா?
"ஞானமொழி" எதுவென உலகுக்கு ஓங்கி உணர்த்துவது ஆழ்வாரின் வாக்கு!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
Please Visit FB: Vinaitheerthan Vino
Pl subscribe You Tube: சொ.வினைதீர்த்தான்
And S.Vinaitheerthan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக