செவ்வாய், 18 மே, 2021

The Art of saying "No" - புறம் 196

 The Art of saying "No"

..................................

Art of saying "No"

இயன்றதும் இயலாததும்!

..........................................

புறநானூற்றுப் புலவன் ஆவூர் மூலங்கிழார் இன்றைக்கு நிர்வாகவியல், வாழ்வியல் நெறி பேசுகிறவர்கள் எல்லாம் உரைக்க முயலுகிற உயர் "ஆளுமை" பண்பைப் புறநானூறு பாடல் எண் 196ல் தெளிவாக உரைக்கிறார்.

பாண்டியன் நன்மாறனைப் புலவர் பரிசில் வேண்டிப் புகழ்ந்துரைக்கிறார். கேட்டிருந்த பாண்டியன் புலவருக்குப் பரிசு நல்காமல் ஏனோ காலம் கடத்துகிறான். புலவர் மூலங்கிழார் சினம் அடைகிறார். "ஆள்வினைப் பண்பை" எடுத்து ஓதுகிறார்.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;"

அதாவது ஒரு விடயம் முடியுமென்றால் முடியும் என்று உடன் செய்லாற்றலும் இயலாதென்றால் "முடியாது" என்று உடன் கூறிவிடுதலுமே "ஆள்வினைப் பண்பின்" வெளிப்பாடு!

முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கேட்டவனுக்கு வருத்தம் தருவது மட்டுமல்லாது முடிவெடுக்காது காலந் தாழ்த்தியவனுக்கும் கேடு விளைவிக்கும்.

"ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்"

முடியாததை முடிப்பேன் என்றலும், முடிந்ததை முடித்துக்கொடுக்காததும் ஒருவனுடைய புகழுக்கு இழுக்கு! அவனுடைய ஆளுமையின் குற்றம்.

அன்று இந்தக் குற்றம் எங்கும் எவரிடத்தும் இருந்ததில்லை என்பதைப் புலவர் கீழ்வருமாறு பதிவு செய்கிறார்.

"அனைத்தா கியர்  எனைத்தும்சேய்த்துக் காணாது கண்டனம்"

எந்த அரசரிடமும் இல்லாத ஆளுமைக் குற்றம் உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன். அது உன்னையும், உன் பிள்ளைகளையும், உன்னுடைய அரசாங்கத்தையும் பாதிக்கும். என்வே உன்னுடைய மக்கள் நன்றாக இருக்க, உன் எஞ்சிய நாட்கள் சிறப்பாக அமையப் பாண்டியனே உடனே "முடிவெடுத்து"  "இயன்றதற்கு"  உடன்பட்டு செயலாற்றி அப்பொழுதே நிறைவேற்று! இயலாதாயின் "இயலாது" என்பதினைக் கூறி உடனே மறுத்துவிடு. குலம் அழிக்கும் ஆள்வினைக் குறையான "நாநயக் குறையை" மாற்றிக்கொள்.

"அதனான் நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளி மறை "நாணலது" இல்லா கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே!"

பாடலில் புலவனின் பெருமிதம் நிறைவுப் பகுதியில் பதிவு செய்யப்படுகிறது. புலவன் கூறுகிறான்  "அரசனே நீ பரிசில் தராததால் நான் ஒன்றும் வெயிலிலும் பனியிலும் மடிந்துவிட மாட்டேன். எனக்கு வறுமை புதிதில்லை. வீசுகின்ற காற்றைத் தடுக்க வல்ல ஆனால் சரியான கூரையில்லாத என் வீட்டில் மங்கல நாண் அல்லது வேறு அணி அணிந்திராத என் மனைவியிடம் நான் செல்கிறேன். "நிறை காக்கும் காப்பு" என்னும் உள்ளதைக் கொண்டு நிறைவு காணும் அவள் குணம் எங்களைக் காக்கும்" 

புறநானுறு பாடல் 196.

ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் நன்மாறனைப் பாடியது.

"ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லேஇரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில்;

அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்

நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும் வெயிலென முனியேன்; பனியென மடியேன்; கல்குயின் றன்ன என் நல்கூர் வளிமறை நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல்; சிறக்க நின்நாளே"

"இயன்றது என்றால் அந்த நொடியே செய்க; இல்லென்றால் உடனே இதமாக மறுத்துவிடுக!" 

வாழ்த்துகள்!சொ.வினைதீர்த்தான்



திங்கள், 17 மே, 2021

7 Habits of highly effective people பயனுறு பழக்ஜம் ஏழு!

 https://fb.watch/4pIJ2HrtBb/


https://www.facebook.com/watch/?v=488063992213102

Attention dear Friends :) 

.....................................

Talk on "Searching Stephen R.Covey in Tamil literature"

By Sri S.Vinaitheerthan

Soft skill Trainer,

Ardent Tamil lover


Kindly comment

https://www.facebook.com/watch/?v=488063992213102

இன்னாநாற்பது + இனியவை நாற்பது = நல்வாழ்வு.

 https://www.facebook.com/watch/?v=186939079899353

https://m.facebook.com/story.php?story_fbid=186939079899353&id=104531668272038


*இன்னா நாற்பது; இனியவை நாற்பது* நூல்கள் குறித்து என்னுடைய உரையின் (ரிக்கார்டிங்) பதிவுக் காணொளி.


கனிவுடன் கேட்டுக் கருத்து எழுதுங்கள்! நன்றி.

சொ.வினைதீர்த்தான்

#Mind_Your_Mind_80

இன்னா நாற்பது, இனியவை நாற்பது

(சங்க இலக்கியச் சிந்தனை) 

சிறப்புரை

Sri S.Vinaitheerthan B.Sc, F.I.I.I

Soft Skills Trainer and Motivational Speaker,

Divisional Manager (Rtd) L.I.C of India,

PG Gurukulam Trainer.

11th March 2021 - Thursday 7.30 PM IST

சென்னைப் பல்கலை - திருமுறை M.A படிப்பு நீக்கம்.

தமிழர்களின் ஆன்மீகச் சொத்தான #சைவ சித்தாந்தம் , #சிவாகமம் #பன்னிரு திருமுறைகள் ஆகியவற்றைக் கற்பிக்கும் பாடப்பிரிவுகள் சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்படும் என இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது 


மாணவர் சேர்க்கை குறைவாக 

உள்ளது என்பதைக் காரணம் 

காட்டி இந்த முடிவைச் சென்னைப் 

பல்கலைக் கழகத் துணைவேந்தர் 

எஸ்.கௌரி என்பவர் அறிவித்துள்ளார். இந்த "கெளரி" அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தொழில் நுட்பப் பட்டதாரி. தமிழ், வரலாறு, வணிகம் , தத்துவம், மருத்துவம் போன்ற துறைகளில் தகுதி பெற்றவர்களே சென்னைப் பல்கலை கழகத் துணை வேந்தராக அமர்த்தப்படுவது மரபு.

ஆனால், ஒரு தொழில்நுட்பாளர்

துணை வேந்தராக அமர்த்தப்பட்டுள்ளார். அதுதான் இந்த அநீதியான முடிவுக்குகுக் காரணம்.


அல்லது யாருடைய ஆலோசனை என்பதும் தெரியவில்லை.


இதுகுறித்து அனைவரும்

கடும் கண்டனத்தைத் தெரிவித்துத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்தப் பாடப் பிரிவுகள் தொடர வேண்டும் என்று வலியுறுத்த  வேண்டும்


The University of Madras has 

suspended three postgraduate 

programmes, in view of reduced enrolment. The programmes are 

MA Saiva Siddhanta, Siva Agamas and Panniru Thirumurai classics.


The decisions were announced at the annual meeting of the 

University of Madras Senate on 

Saturday, By Vice-Chancellor S Gowri .


இந்து மதம் என்பதில் சைவம் சேர்ந்துதானே? எவரிடமிருந்தும் இந்தச் செய்தியைக் குறித்தும் பன்னிருதிருமுறை போன்ற படிப்புக்களை நீக்கக்கூடாது; ஒருவர் சேர்ந்திருந்தாலும் நடத்த வேண்டும் என்று எடுத்துக் கூறும் ஒரு பதிவையும் இதுவரை பார்க்கவில்லை. 


இன்று பல கிராமங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளது. இருந்தாலும் அப்பள்ளிகள் அரசாங்கத்தால் நடத்தப்படவில்லையா?


ஆர்வலர்கள் உடன் நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுக்க வேண்டும்!


சொ.வினைதீர்த்தான்

திருவாடானை கோவில் பதிவு, படங்கள்.

 https://m.facebook.com/story.php?story_fbid=982974488403291&id=100000722463448


திருவாடானை ஆலய தரிசனம் - பாடல்பெற்ற தலம்.

------------------------------------------வணக்கம். திருவாடானை அரசு கலைக்கல்லூரி மணிமேகலை காப்பியம் குறித்த பயிலரங்கில் உரையாற்றச்சென்றிருந்தபோது 23.3..2015 மாலை பாண்டியநாட்டில் பாடல்பெற்ற பதினான்கு கோவில்களில் ஒன்றாகிய ஆடானையப்பர் கோவிலில் வழிபட்டுவந்தேன். இராமநாதபுரம் சமத்தானத்தின் ஆளுகைக்குட்ட நகரத்தார் திருப்பணியான கோவில் குடமுழுக்கு காணவிருக்கிறது. அருமையான சிற்பத்தொகுதிகள் நிறைந்த 130 அடி ஒன்பதுநிலை கோபுரத்திற்கு வண்ணபூச்சு வேலை பூர்த்தியாகவிருக்கிறது.


1.ஆடானையப்பர், ஆதிரத்னேசுவரர், அஜகஜேசுவரர் என்று பெருமான் அழைக்கப்படுகிறார். ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தப்பெருமான் அழைத்த ஆதியான் உறை ஆடானை  என்ற பெயரிலேயே திருவாடானை என ஊர்ப்பெயர் பதிவாகியுள்ளது.


புராணக்கதை மிகவும் பொருள்பொதிந்தது. வருணன் மகன் வாருணி என்பான் துர்வாசமுனிவரின் வேள்விக்கு இடையூறு செய்துவிடுகிறான். கோபத்திற்கு பெயர்போன துர்வாசர் மரபுக்குப்பொருந்தாத செய்கை புரிந்ததால் ஆட்டின் தலையும் யானையின் உடலும்கொண்ட பொருந்தா உருவமடையுமாறு வாருணிக்குச் சாபம் அளித்துவிடுகிறார். ஆட்டின் வாயால் யானை உடலுக்கு ஏற்றவாறு உண்ணமுடியாமல் அவன் பசிப்பிணியடைகிறான். மணிமேகலை கதையில் வருகிற காயசண்டிகையும் கூட ஒரு முனிவர் உண்ண வைத்திருந்த அருங்கனியை அவர் குளிக்கச்சென்றிருந்தபோது சிதைத்துவிடுவதால் தீராப்பசி நோய்க்கு ஆளாகும்படி முனிவருடைய சாபத்தைப்பெறுகிறாள். பின்பு அமுதசுரபி உதவியால் அவள் பசிப்பிணியை பாரகம் அடங்கலும் பசிப்பிணி தீர்த்த பாவையாகிய மணிமேகலை போக்குகிறாள். இங்கு வாருணி சூர்ய தீர்த்தத்தில் மூழ்கி சிவனை வழிபட்டுச் சாபவிமோசனம் பெறுகிறான்.

ஒருவன் பொருந்தாத செய்கை செய்தால் என்ன நிகழும் என்பதை இத்தொன்மக் கதைகள் உணர்த்தும் செய்தியாக நான் மாணவர் பயிலரங்கில் பகிர்ந்துகொண்டேன். மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவருக்குப் பொருந்தாத செயலில் ஈடுபட்டால் துன்பப்படவேண்டும் என்பதை உணர்த்தினேன்.

 

2.முன் மண்டபம் வித்தாரமான கல்திருப்பணி. 108 தூண்கள். பெரும்பாலும் வடிவங்கள்,பூக்கள்,பறவைகள் என்ற வகையில் பலநூறு புடைப்புச்சிற்பங்கள். தூண்களின் வரிசையும் ஒழுங்கும் அத்தூண்கள் தாங்கும் கல்பலகைகளின் வேலைப்பாடும் கவர்வன. 


3.திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்துமூவர் பத்தியில் ஒவ்வொரு அடியாருக்கும் மேலே சுவரில் அவருடை வண்ணத்திருவுரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காணக்கிடைக்காதது.

4.ஆலமர்செல்வனின் மண்டபம் அழகான சிற்ப தூண்களுடன் கருங்கல் திருப்பணி.சனகாதி முனிவர்கள் நால்வரும் எதிரில் வரிசையில் அமர்ந்துள்ளனர்.


5.இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் “ஆசாரபக்தியுடன் ஞானாகமத்தையரு ளாடானை நித்தமுறை பெருமாளே” என்று ஞானம் பெற வழிகாட்டியவனெனத் தொழுகிறார்.

6.ஆதிரெத்னசுவரர் என்ற திருப்பெயருடனும் அழைக்கப்படுகிற சிறிய இலிங்கத் திருவுரு இரத்தினம்போல விளக்கொளியில் ஒளிவிடுகிறது.

7.செப்புத்திருமேனிகள் வெகு அழகு.


8.சுவாமியின் இடப்பக்கத்தில் கிழக்கு நோக்கி முன்மண்டபம், சுற்றுப்பத்தி என்று பரந்த தனிக்கோவிலில் அம்பிகை அன்பாயி, அன்பாயிரவல்லி, சினேகவல்லி என்ற திருபெயர்களோடு அருளாட்சி செய்கிறாள். வல்லி என்றாள் கொடி என்று பொருள். அன்பு,சினேகம் ஒரு கொடியாகத்தழுவினால் எவ்வளவு பேறு!


9.இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை மலரால் அர்ச்சித்து மனதால் சிந்தித்து நாவால் அவன் புகழ்பாட வளமெல்லாம் பெருகும் என்பது உறுதியென திருஞானசம்பந்தர் பதிகம் அருளியுள்ளார். “போதினார் புனைந்து ஏத்துவார்தமை வாதியா வினைமாயுமே” என்பதும் ”அங்கை யானுறை யாடானை நாதனை தன்கையால் தொழுதுஏத்தவல்லவர் மங்குநோய் பிணிமாயுமே” என்பதும் அவருடைய திருவாக்கு.

  

திருக்கோவில் படங்கள் பகிர்ந்துள்ளேன். பொறுமையுடன் சொடுக்கிப் பார்க்க வேண்டுகிறேன். நண்பர்கள் ஆதிரத்னேசுவரர் என்னும் ஆடானைஅப்பர், சினேகவல்லித்தாயார் அருள்பெற வாழ்த்துகிறேன். நன்றி.

தகவல் தொடர்பு - பன்மொழி திறன் - சாதுவன்

தகவல்தொடர்பு – பன்மொழியின் பயன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பல மொழிகள் தெரிந்துவைத்திருத்தல் உயிரையும் காக்கும் என்பதனை மணிமேகலை காப்பியத்தில் வருகிற ஒரு கிளைக்கதை உணர்த்துகிறது. உரையாடலில் Logic and Sequencing என்கிற கோர்வையாகவும் தர்க்க வாதச் சான்றுகளுடன் பேசுவது கொடியவர் மனத்தையும் மாற்றவல்லது என்பதனையும் இக்கதை காட்டுகிறது.


மணிமேகலை காப்பியத்தில் ஆதிரை என்னும் பெண்ணின் நல்லாளின் கணவன் சாதுவன் என்னும் வணிகன் ஆவான். அவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையுடன் சேர்ந்து வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டி விடுகிறாள். பிறகு சாதுவன் வணிகம் காரணமாகக் கடலில் செல்லும் மக்களோடு தானும் போகிறான்.


கடற்காற்றின் சீற்றத்தால் அவன் சென்ற கலம் சிதைகிறது. முறிந்த பலகை ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்து விடுகிறான் நாகர்கள் அவனைக் காண்கிறார்கள். அவன் ஊனைத் தின்னலாம் என்று நினைத்து “ஊன் உடை இவ்வுடம்பு உணவு” என்று அவனை எழுப்புகிறார்கள். 


சாதுவனுக்கு அவர்களுடைய மொழி விளங்குகிறது. “அவர் பாடை மயக்கு அறு மரபின்” கற்றனன் ஆதலின் அவர்களுடன் அவர்கள் மொழியில் உரையாடுகிறான். அவர்கள் அவனைத் தங்கள் குரு மகனிடம் கூட்டிச் செல்லுகிறார்கள். 


அங்கே கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போன்று (எண்கு தன் பிணவோடு இருந்ததுபோல) தோன்றுகிறது.


அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும், அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலைவன் தன் மக்களிடம் சொல்கிறான். அது வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான். நாகர் தலைவனோ, ”பெண்டிரும் உண்டியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் மக்களுக்கு வேறு என்ன பயன் உண்டு? உண்டானால் எங்களுக்குக் காட்டு” என்று கேட்கிறான். 

சாதுவன் மறுமொழியாக நல்லறம் என்றால் என்ன என்று எடுத்துச் சொல்கிறான்.


”மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்

கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்

அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டு” என உணர்த்துகிறான்.


சாதுவனின் ”நல்லறம்” பற்றிய பேச்சு நாகர் தலைவனுக்குப் பெரும் சிரிப்பைத் தருகிறது. எனவே அவன் சாதுவனிடம் கேட்கிறான்: ”உடம்பை விட்டு ஓடிப் போகும் உயிர் இன்னோர் உருவம் கொண்டு இன்னோர் உடம்பில் புகும் என்று சொன்னாய். அந்த உயிர் எப்படிப் போய்ப் புகும் என்று சொல்லு” சாதுவன் மறுமொழியாகக் கூறுகிறான்,


”உயிரோடு வாழும்போது உடலுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் உயிர் போனவுடன், அந்த உடம்பை வெட்டி, எரித்தாலும் அந்த உடலுக்கு உணர்ச்சியில்லை. அதனாலேயே அந்த உடம்பை விட்டு வெளியேறியது ஒன்று உண்டு என்று தெரிந்துகொள். உடம்பை இங்கேயே வைத்துவிட்டு உயிர் பல காவதம் செல்வதைக் கனவு காணும்போதுகூடத் தெரிந்துகொள்ளலாமே! அப்படித்தான், உடம்பை விட்டுப் போன உயிரும் தான் செய்த வினைக்கு ஏற்றபடி அமைந்த ஓர் உடம்பில் புகுகிறது. இதை நீ தெளிவாகத் தெரிந்துகொள்.” 


இப்படிச் சாதுவன் சொன்னதைக் கேட்ட நாகர் தலைவன் ”நல்லது அறிந்த அந்தச் செட்டி”யின் கால்களில் விழுந்து கேட்கிறான்: ”கள்ளையும் ஊனையும் தவிர்த்தால், இந்த உடம்பில் உள்ள உயிரைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியவில்லை. இறக்கும் வரை எங்களுக்கு ஏற்ற நல்லறத்தை எடுத்துச் சொல்லவேண்டும்” சாதுவன் அவர்களுக்கு ”முதுமை அடைந்து இறந்து போகும் விலங்குகளை” உண்ணுமாறு கூறி நல்ல வழியில் வாழ்வது எப்படி என்று சொல்கிறான்.


நாகர் தலைவன் நன்றி காட்டுகிறான். அவன் கொடுத்த பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான். இவ்வாறாகப் பல மொழிகள் கற்றுப் பிறர் மனங்கொள்ளுமாறு உரையாடுகிற திறனை வளர்த்துக் கொள்கிறபோது இன்னல் விலகி வாழ்வு சிறக்கிறது. 


இராமாயணம், மகாபாரதமட்டுமல்லாது நம் நாட்டில் எழுந்த பிற மரபுக் காப்பியங்களிலும், இலக்கியங்களிலும் பல்வேறு கிளைக்கதைகள், எடுத்துக்காட்டுகள், செய்திகள் நம்மை வழிநடத்தும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்.

மணிமேகலை - Maslow - தேவைக்கோட்பாடு!

மணிமேகலை காப்பியமும் தேவைக்கோட்பாடும்

>>>>>>>>>>>>>>>>>>>>

திருவாடானை அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘மணிமேகலை காப்பியத்தில் தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில் உரையாற்ற பேரா மு.பழநியப்பன் அவர்களால் வாய்ப்பமைந்தது. அதற்காக மணிமேகலை காப்பியத்தை முழுவதும் படித்தேன். மணிமேகலை வாழ்க்கையோடு ஆப்பிரகாம் மாஸ்லாவின் ‘தேவைக்கோட்பாடு’ கட்டமைப்பு பொருந்திப்போவதைக் கண்டேன். 

மாஸ்லா கூறும் தேவைகள்: 1.அடிப்படைத் தேவைகள் (Basic needs), 2.பாதுகாப்புத் தேவை (Security Need) 3.Companionship Need 4.Esteem Need 5.Self Actualization. ஒரு தேவை பூர்த்தியானதும் அடுத்த தேவைக்கு மனிதன் ஏங்குகிறான்; அடைய முயல்கிறான் என்பது அவருடைய உளவியல் கொள்கை.


இந்த அடிநிலைத் தேவைக்கட்டமைப்புச் சிந்தனைகளை மணிமேகலை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதல் அடிப்படைத்தேவையான (Basic Need) பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற மணிமேகலையின் எண்ணத்தின் வலுவானது அவள் கைகளில் அமுதசுரபியை மணிமேகலா தெய்வம், தீவதிலகை வழியாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.


தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அரசன் கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.


”ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”


உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.இவ்வாறு மனிதவாழ்வின் முதல் தேவையான பசிப்பிணியறுத்தல் குறித்துக் காப்பியம் பேசுகிறது.


மாதவி மணிமேகலைக்கு காட்டுகிற துறவறநெறி ஆடல் மகளிர் வாழ்க்கையை மணிமேகலை தவிர்க்க உதவும் பாதுகாப்பு (Security Need) அரணாகிறது.


அடுத்த தேவையான தோழமை (Companionship Need) குறித்துப் பார்க்கலாம். மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.


"புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 

இதுவே ஆயின் கெடுக தன் திறம்... "


என்று. அவ்வெண்ணெத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். 


அவள் கைகளில் அமுதசுரபி கிடைக்கிறது. “காணார், கேளார், கால்முடமானோர், பசிநோய் நோற்றார், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதி” என்று அருந்தியோர்க்கெல்லாம் ஆர் உயிர் மருந்தாய் பெருவளம் அமுதசுரபி வழியாக சுரந்து நல்குகிறாள் மணிமேகலை. ”பசிப்பிணி தீர்த்த பாவை”யாக யாவரும் போற்றுகிறார்கள். (ESTEEM NEED)


போற்றிய பின்னரும், யாவரும் அங்கீகரித்துக் கொண்டாடிய பின்னரும் மணிமேகலையின் தேவையடங்கவில்லை. அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை. 


அவள் தேவை உச்சபட்சத்தேவையான தன்னை அறிதல், தன் நோக்கம் அறிதல், அதனை அடைதல் (Self Actualization) என்பதிலேயே நிலை கொண்டிருக்கிறது அறவண அடிகளிடம் ”அடிகள் மெய்ப்பொருள் அருளுக” எனத் தருமம் கேட்கிறாள். புத்த சங்கத்தில் சரண் புகுகிறாள். இறுதியில் மனத்து இருள் நீங்க நோன்பு நோற்கிறாள். 


பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்று உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்.

மணிமேகலை - தன்னம்பிக்கை உரை!

 https://m.facebook.com/story.php?story_fbid=4234262143274493&id=100000722463448

https://m.facebook.com/story.php?story_fbid=4058368310853310&id=100000405432359 


இன்று (3.4.2021) மாலை Readforte தளத்தில் நான் "மணிமேகலையில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெறொரு தொலைபேசி மூலம் பதிவுசெய்யப்பட்டது. உரையை 90% பதிவுசெய்ய முடிந்தது. அந்த ரிக்கார்டிங் உடைய தொடர்பு லிங் நண்பர்களின் கனிவான கருத்துக்கு அளித்துள்ளேன்.


மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இலக்கியங்களின் உயர்ந்த நோக்கங்களுள் ஒன்று படிப்போருக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகும். மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் தன்னம்பிக்கைச் சிந்தனைகளை பின்வரும் நிலையில் அடுக்கிக் காண இயலும்.


1. கோவலன் தன் செல்லப் பெண்ணுக்குப் பெயர் வைக்கிறபோது எண்ணிப்பார்த்து ‘மணிமேகலை’ என்ற நன்னெறித் தெய்வத்தின் பெயரை இடுகிறான். அப்பெயர் அவளுடைய நல்ல எண்ணங்களுக்கு வலுவூட்டுகின்றது. இன்று பிள்ளைக்குப் பெயர் வைப்பவர்கள் உணர வேண்டிய செய்தி இது.


2.பிள்ளைகளுக்குப் பெற்றோர் நடந்துகாட்டி வழிகாட்ட வேண்டும். தங்கள் குடும்ப அங்கத்தினரின், மரபினரின் நற்செயல்களைத் தாய் எடுத்துச்சொல்லி வளர்க்கிறபோது முன்னோர் உயர்ந்த நெறிகள் அவர்கள் மனதில் படியும். 


சித்ராபதி வழி வந்த ஆடல் மகளிர் வாழ்க்கை, கோவலன் கண்ணகி வழியாக வருகிற வாழ்க்கை என்று இரண்டு மரபுகள் மாதவி முன் தெரிந்தெடுக்க உள்ளன. ஆனால் மாதவி துறவறம் துவராடை அணிந்து மணிமேகலைக்கு வழக்கு காட்டியாக முன்நிற்கிறாள்.


 “காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை அருந் தவப்படுத்தல் அல்லது யாவதும்

திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்” 


என்று சொல்லி மணிமேகலை நெஞ்சத்தில் தான் கண்ணகி மகள்; தீத்தொழிலுக்கு உரியவளன்று என்ற நெறியை வளர்தெடுக்கிறாள்.


3. நல்ல அறங்களுக்கு முயல்பவர்களுக்கு மக்கள், பெரியோர், சூழ்நிலை, தெய்வம் அனைத்தும் துணையாகும் என்பதைக் காப்பியம் உணர்த்துகிறது. மணிமேகலைக்கு சுதமதி, காயசண்டிகை, ஆதிரை, அறவண அடிகள் அனைவரும் உதவுகின்றனர்.  ”தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்” என்பதற்கிணங்க மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத் தீவுக்குக் கொண்டு சேர்க்கிறது. வரங்கள் நல்கிறது. 


தீவில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலை கைகளுக்கு அமுதசுரபி வர துணை நிற்கிறது. பெரியாரைத் துணைக்கொள்வதில் மணிமேகலை சிறந்து விளங்குகிறாள்.


4. நல்லெண்ணத்தின் வலிமையால் வந்த துன்பம் நீங்கும். உதயகுமரன் கொலையால் மணிமேகலை சிறைபுகுகிறாள். சிறையில் இராசமாதேவி காவலர்மூலம் பல கொடுமைகள் செய்கிறாள். அவற்றை மணிமேகலை பொறுத்துக் கொண்ட திறத்தைக் கண்டு இராசமாதேவி மனம் மாறி அவளைத் தொழுகிறாள். பெரியோரைப் போற்றும் தவச்செல்வி அதனைத் தடுத்துத் தான்தொழுகிறாள். 


5.தகவல் தொடர்பு கலை சாதுவன் கதை மூலம் தெற்றென விளக்கப்படுகிறது. நாகர்மொழி அறிந்திருந்தமை அவன் உயிரினைக் காக்குகிறது. சாதுவன் நரமாமிசம் உண்பவர்களிடமும் அவர்கள் மனம்கொள்ளுமாறு சான்றுகளுடன் அறிவைக் கெடுக்கும் கள்ளுண்ணுதல், மனிதனால் படைக்கவியலாத உயிரைக் கொல்லுதல் போன்றவற்றைத் தவறெனத் தன் நாகர் மொழித்திறன் மூலம் உணர்த்தித் திருத்துகிறான். ஒருவனுடைய முன்னேற்றத்திற்குக் காரணமான அறிவை மயக்கும் கள் தன்முன்னேற்றம் வேண்டுபவர் விலக்க வேண்டியதில் தலையாயது என்பது வலியுறுத்தப்படுகிறது..


6. “பொறியின்மை யார்க்கும் பழியன்று

ஆள்வினை யின்மை பழி” என்பது பொய்யாமொழி. விதியெவ்வாறு இருந்தாலும் தவத்தாலும் பசிப்பிணி அகற்றும் அறத்தாலும் தொடர்ந்து செயலாற்றி மானுடம் போற்ற வாழ்க்கை நடத்தலாமென்பதற்கு எடுத்துக்காட்டாகிறாள் மணிமேகலை.


7. ஆப்பிரகாம் மாஸ்லா தன்னுடைய உளவியல் கோட்பாட்டில் அடிப்படைத் தேவையான உண்டி முதல் உயர்ந்த பட்சத் தேவையான இலக்கு நிறைவேறல், தன்னிலை அறிதல் வரை தேவைகள் நிறைவேறுகிற போது மனிதன் தன்னூக்கம் கொள்கிறான் என்கிறார். பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்றுப் உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.


ஒரு தனி மனிதப் பெண்ணாக இருந்து மணிமேகலை சாதித்த சாதனைகள், மற்றும் அவள் சிக்கல்களை எதிர்கொண்ட விதம் ஆகியன குறிப்பாகப் படிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவன.


வாழ்த்துக்களுடன்.

சொ.வினைதீர்த்தான.

தனக்கெனச் சம்பாதித்த அழகப்பா

 https://m.facebook.com/story.php?story_fbid=4243233425710698&id=100000722463448

6.4.2021 வள்ளல் அழகப்பருடைய 112வது பிறந்தநாள். இன்று பிற்பகல் 3 மணிக்கு சனநாயக் கடமையை நிறைவேற்றிய பிறகு கல்லூரியின் வடபால் உள்ள வள்ளல் நினைவிடம் சென்றேன். காலையில் கல்வியாளர்கள், மாணவர்கள், நகரின் பெருமக்கள் மலைபோல குவித்திருந்த  மலர்க்குவியலில் துயில் இடம் போர்த்தப்பட்டிருந்தது. வேறொருவரும் இல்லாத அமைதியில் அழகப்பரின் புகைப்படம் அருகே நின்றது மனதை நிறைத்தது.


உலகில் உள்ளவரெல்லாம் தன் சந்ததிக்குப் பணம் சம்பாதித்தபோது அழகப்பா ஒருவர் தாம் தனக்கெனப் பொருள் சம்பாதித்தாராம். ஆம்; அவர் மட்டும் தான் பல்லாயிரம் மாணவர் நெஞ்சில் அறிவு விளக்காய் இன்றும் வாழ்கிறார்!


"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு!" (231)


அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

Please see photos in my FB link: Vinaitheerthan Vino

அகப் பகை! காண்தகு கணிகை.

 அகப் பகை!

>>>>>>>>>

"காண்தகு மென்றோள் கணிகை வாயின் சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும்- மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு."


என்ற திரிகடுகம் பாடல் எண் 42ஐ கண்ணுற்றேன்.


விளக்கம்: 

1.விலை மாதர்களின் இனிய சொற்கள். 2.மீன்களைப் பிடிக்க தூண்டில் முள்ளில் வைக்கப்பட்ட தவளை. 3.பகைவர்கள் காட்டும் போலி வணக்கம். இவை மூன்றும் கேடு விளைவிக்கும். (அளறு - நரகம்)


பொருள் பெண்டிரின் பொய்மைப் புன்னகை, ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதின் கவர்ச்சி, கள்மயக்கம் இவையெல்லாம் பிறிதொன்று தருகிற பொய் வரவேற்பு!


ஆனால் நம்முடைய அகத்தில் எழுகின்ற பகை குறித்துத் திருக்குறள் கூறுவது என்னவென்று தேடிப்பார்த்தேன்.

அழுக்காறு என்னும் பொறாமை, பேராசை, சினம், இன்னாச் சொல் இவைகள் நான்கும் ஒருவனுக்கு இழுக்கைத் தரவல்ல பகை என்கிறது திருக்குறள்.


கல்லாமை, பொறுமை இன்மை, ஆள்வினையின்மை, உலகத்தோடு ஒட்ட ஒழுகாமை, மடி, மறதி இவையும் ஒருவனுக்குப் பகையே!


புறப்பகை அறிந்ததே!

புறப்பகையின் போலி வணக்கம் வெளிப்படை. ஆனல் அகப்பகை? 


மண்பாண்டத்தை உடைக்கும் கருவி போல (குறள் 883) ஒன்றும் உரு இல்லாது ஒருவனை இவை அழிக்கின்றன.


"பகைஎன்னும் பண்பிலதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று (871)


விளையாட்டாகக் கூடக் கைக்கொள்ளக் கூடாதாம்.


"வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு (882)


புறப்பகையை எதிர்கொண்டு வென்றுவிடலாமாம்! ஆனால் நம் அகத்தில் தோன்றுகிற பகை உணர்வை என்ன செய்வது?சிந்தை முழுவதும் நற்சிந்தனை, நற்செயல்களால் நிரப்பினால் நம்மிடம் உள்ள அகப்பகை ஒழிவது உறுதி!

வாழ்த்துகள்!

சொ.வினைதீர்த்தான்

பயனுறு பழக்கம் ஏழு!

 https://m.facebook.com/story.php?story_fbid=4251352824898758&id=100000722463448


https://youtu.be/Ds7GXt2xAPY


5.3.2021 முதல் *தினந்தோறும்* டெல்டா தொழில் முனைவோர் கூட்டமைப்பு கலந்து உரையாடுவோம் நிகழ்வின் ஒரு பகுதியாக இரவு 8.10 முதல் 8.20 வரை "நூல் நயம்" என்று உரை நல்குகிறேன். 

7 habits of highly effective people நூல் சார்ந்து "பயனுறு பழக்கஙகள் ஏழு" என்ற என்நுடைய உரையை அன்புடன் செவிமடுக்க வேண்டுகிறேன்.


(மேலே உள்ள லிங் காப்பி செய்து கூகுளில் பேஸ்ட் செய்தால் தொடர்பு கிடைக்கும்)


நன்றி

சொ.வினைதீர்த்தான்

வாழ்தல் - Art of Living

https://youtu.be/h8zfYSxll7E

வாழ்தல், இருத்தல், பிழைத்தல் குறித்தும் சங்க காலத்தில் "வாழ்தல்" என்று புலவர் கருதிய ஒரு பெரு  வாழ்க்கை குறித்தும் உரை.


வழங்குபவர்: திரு சொ.வினைதீர்த்தான்.

நன்றி

............................

இடுக; சுடுக; எதுவும் செய்க!

>>>>>>>>>>>>>>>>>>>

பாடியவர்: பேரெயில் முறுவலார். 

பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன் (புறநானூறு 239). இவன் பாண்டிய நாட்டைச் சார்ந்த ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். 

பாடலின் பின்னணி: சங்க காலத்தில், வாழ்க்கையின் உறுதிப் பொருட்களாகக் கருதப்பட்ட அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் நம்பி நெடுஞ்செழியன் சிறப்புற்று விளங்கிப் புகழுடன் வாழ்ந்து இறந்தான். அவன் இறந்த செய்தி கேட்டு பலரும் அவன் அரண்மனையில் கூடினர். அவன் போரில் இறக்காததால், அவன் உடலை வாளால் பிளந்து, புதைக்க வேண்டும் என்று சிலர் கருதினர். வேறு சிலர், அவன் உடலை எரிப்பதுதான் முறையான செயல் என்று கருதினர். அப்பொழுது, பேரெயில் முறுவலார், ”நம்பி நெடுஞ்செழியன் பல துறைகளிலும் சிறப்புற்று வாழ்ந்தவன். அவன் செய்யத் தக்கவற்றை எல்லாம் சிறப்பாகச் செய்தவன். ஆகவே, அவனைப் புதைத்தாலும் சரி, அல்லது எரித்தாலும் சரி; இரண்டுமே தவறில்லை.” என்று இப்பாடலில் கூறுகிறார்.


"தொடியுடைய தோள் மணந்தனன்;

கடி காவிற் பூச்சூடினன் ;

தண் கமழுஞ் சாந்து நீவினன் ;

செற்றோரை வழிதபுத்தனன் ;

நட்டோரை உயர்புகூறினன் ;

வலியரென வழி மொழியலன் ;

மெலியரென மீக்கூறலன்;

பிறரைத்தான் இரப்பறியலன் ;

இரந்தோர்க்கு மறுப்பறியலன் ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;

வருபடை எதிர்தாங்கினன் ;

பெயர்படை புறங்கண்டனன் ;

கடும் பரிய மாக் கடவினன் ;

நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;

ஓங்கு இயற் களிறுஊர்ந்தனன்;

தீஞ்செறி தசும்பு தொலைச்சினன்;

பாண் உவப்பப் பசி தீர்த்தனன்; மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன்; ஆகலின்

இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ,

படுவழிப் படுகஇப் புகழ் வெய்யோன் தலையே.

https://m.facebook.com/story.php?story_fbid=4262713727096001&id=100000722463448

தன்னம்பிக்கை - மணிமேகலை காப்பியம்

 மணிமேகலை காப்பியத்தில் "தன்னம்பிக்கை கூறுகள்" குறித்துக் காணொளியின் 12வது நிமிடம் முதல் 21 வது நிமிடம் வரை நவிலக் கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்கிறேன். நன்றி!

https://m.facebook.com/story.php?story_fbid=4279415775425796&id=100000722463448

சொ.வினைதீர்த்தான்

உலகம் உருள்வது யாராலே?

 இந்த உலகம் நிலை பெற்றுள்ளது யாரால்? இயங்குவது எவரால்? யாரால் என்பதற்குப் பத்துக்கும் மேலான அதிகாரங்களில் இலக்கணம் வகுத்துள்ளார் வள்ளுவர். அவை அனைத்துக்கும் இலகியமாக விளங்கும் ஒரு சங்கப் பாடல் வழியாக என்னுரை!

https://m.facebook.com/story.php?story_fbid=4295917483775625&id=100000722463448

பிறர்க்கென முயல்க! 

எனக்கென ஒரு வரி கருத்து எழுதுக!


வாழிய நலம்! 🙏

சொ.வினைதீர்த்தான்


https://youtu.be/YXd0

Utopia - முக்கூடற்பள்ளு - கனவு நாடு!

 *முக்கூடற் பள்ளு* ஆசிரியன் கண்ட *கனவு நாடு* - 

"கறைபட்டது, சிறைபட்டது, மறைபட்டது எவை?" 

7 நிமிட என்னுரை! "Johari Window* வும் உண்டு. 


உழவர் இலக்கியம் காட்டும் உன்னதம்! *கேட்டு ஒரு வார்த்தை* எழுதுங்கள் 🙏


சொ.வினைதீர்த்தான்

https://m.facebook.com/story.php?story_fbid=4313409772026396&id=100000722463448


உழைப்பாளர் தினம் - sengkal = மண்+உழைப்பு

 அனைவருக்கும் உழைப்பாளர் தின  வாழ்த்து.


ஒரு காணொளி கண்டேன். "ஒரு செங்கலிலிருந்து உழைப்பை எடுத்துவிட்டால் அது களிமண். ஒரு இயந்திரத்தில் இருந்து உழைப்பை எடுத்துவிட்டால் அது ஒரு இரும்புக் குவியல். அதுபோல ஒரு நாற்காலியில் உழைப்பு இல்லாவிட்டால் மீதமிருப்பது மரமே!" என்றது அக்காணொளி. 👏👏👏👏


அழகு நகருண் டாக்கி சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு

தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன் விளைக்கும்

நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?

பொற்றுகளைக் கடல்முத்தை மணிக் குலத்தைப்

போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

உலகத் தொழிலாளரையெல்லாம் ஒரு சேரப் போற்றுகிறேன்.

சொ.வினைதீர்த்தான்

திருப்புறம்பியம் - சொ.வினைதீர்த்தான் உரை!

 ஐந்து பன்னாட்டு அமைப்பினர் இணையம் வழியாக நடத்துகிற உரைத்தொடரில் 10.5.2021 அன்று

காவிரி வடகரைத் தலங்கள் உரைவரிசையில் "திருப்புறம்பியம் புன்னை வன நாதர், கரும்பன்ன சொல்லி அம்மை கோவில்" குறித்த சிறப்புரை 👌

தேவாரம் பாடல்பெற்ற கோவில் சார்ந்த என்னுடைய உரை முயற்சி!

திருப்பறம்பயம் மூவர் பாடிய தலம்.  பிரளயம் காத்த விநாயகர் திருவுரு  சிப்பி, நத்தைக் கூடு, கிளிஞ்சல் போன்றவற்றால் உருவனாது. வருடத்திற்கு ஒரு முறை சதிர்த்தியன்று தேனாபிசேகம் செய்யப்படுகிறது. அனைத்துத் தேனையும் உள்வாங்கிவிடும் சிறப்புடையது இந்த விநாயகர் திருவுரு.நான்

குரு (வெள்ளி) பகவான் தனிக்கோவிலிலும் தட்சிசிணாமூர்த்தி தனிக்கோவிலில் சட்டைநாதர் தளமுடனும் அருள்பாலிக்கிறார்கள். சாம்பிராணித் தைலம் மட்டிலும் பயன்படுத்தப்படும் குகனை ஏந்திய அம்பிகை தனிக்கோவிலில் காட்சி தருகிறார்.

கோவில் சிற்பத் தொகுதிகள் காணக் கண் கோடி வேண்டும்!


"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை" திருப்புறம்பயம் தலத்திற்கான மூவர் தேவாரத்தில் பூரணமாய்ப் பொங்கிப் பொலிந்திருக்கிறது . (Shaivam.Org திருப்புறம்பயம்)


திருவிளையாடல் புராணம், தல புராணத்தில் வணிகப் பெண் திருமணத்திற்குச் சாட்சி உரைத்ததால் "புன்னை வனநாதர்" என்னும் பெருமான் "சாட்சிநாதர்" எனத் திருநாமம் பெறுகிறார். அம்பாள் "கரும்பன்ன சொல்லி" வடமொழியில் "க்ஷீண வாணி" என அழைக்கப்படுகிறார்!

அன்புடன் உரையைச் செவிமடுக்க வேண்டுகிறேன்.

நன்றி🙏

சொ.வினைதீர்த்தான்

https://m.facebook.com/story.php?story_fbid=4347800298587343&id=100000722463448


https://youtu.be/FYnl5zzkEw8

உப்பு, சர்க்கரை, சோறு

Sweet Fragrance!

அக இலக்கியம்

....................................

கீழ்க்கண்ட பதிவினை நண்பர் ஒருவர் புலனத்தில் பகிர்ந்திருந்தார்.


Salt -VS- Rice.

...................

If you were to cook 3 cups of rice, would you add 3 cups of salt to it ?

Certainly not !

So, in every preparation of rice, the rice always outnumbers the salt, yet a little salt makes a huge difference/impact in the overall outcome.


In the room in which you currently are, look up at the ceiling... 

What is the size of the bulb compared to the size of the room ? 

It is probably a ratio of 1:5000.

Yet, darkness flees the entire space once the small bulb is flipped on.


If I am the salt of the earth, and the light of the world, then "little me" has the ability to make big things happen..


Sometimes, because we feel outnumbered or overwhelmed at the sheer magnitude of evil or wrong-doers, we then choose powerlessness, and decide to go with the flow, not standing up for what we believe is right.

Little doesn't mean insignificant.


You are significant.

Your presence should make a BIG difference. 


Stop waiting to be on the side of the majority.

They may be the majority, but they are the trivial majority, and you are the impactful minority.

They are the rice of the world, and you are the salt of the world..


They are the room and you are the light.

Make your influence felt!

Remember:

You are the world's seasoning, to make it beautiful...


So if we can just do the right seasoning to  make even one life beautiful our life is worth living😊

Onwards and Upwards ! 

Be the salt or the light 🌟

.. .......  . ......  ...................


மேற்கண்ட பதிவு என்னைப் பெரிதும் கவர்ந்ததால் நான் எழுதிய மறுமொழியை நண்பர்களின் கனிவான கருத்துக்குப் பகிர்கிறேன்.


"Your presence makes much difference" is a very true statement.


Once a poet came to a court. The king asked the servant to bring a full cup of milk and give to the poet. The meaning was that the court was decorated with full of scholars and poets. There was no place for the new person.


The poet asked the servant to bring some sugar. When brought he added the sugar to the cup of milk. The sugar dissolved in the milk without occupying any space but giving sweetness to the milk. That was how the poet indicated to the king that he would be a value addition to the kingdom.


Like this story everyone of us could be of value addition to any person or to every situation. We can sweeten anybody's life 🙂


Valthukal

S.Vinaitheerthan.

 ஞானத் தமிழ்!

யானே பெருந்தமிழன்; நல்லேன்; பெரிது!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கூகுள் குழுமம் ஒன்றில் ஒரு அன்பர் ஒரு குறிப்பிட்ட மொழியினை ஞான மொழி, தேவ மொழி, அதுவே பாரத மொழி என்றெல்லாம் பலப்பட தொடர்ந்து எழுதி வருகிறார்.


அவருக்கு ஏழு கால் மூத்த, முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பூதத்தாழ்வருடைய திவ்வியப் பிரபந்த மொழி என்னுடைய நினைவிற்கு வந்தது.


தமிழைப் பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்; வண்தமிழ்; ஒண்தமிழ்; கன்னித்தமிழ் என்று சிறப்புச் சொற்களைச் சேர்த்துச் சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழவர்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஒரு அடைமொழியிட்டு அழைக்கிறார்.


ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக் கொண்டும்  பெருமையடைகிறார்.


தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்க வல்லது. கற்றவரின் அறிவை நேர்மையான நெறியில் செலுத்தும் தன்மை தமிழுக்கு உண்டு. ஆதலால் ஞானத்தமிழ் என்கிறார்.


"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக

இன்புஉருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி

ஞானசுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத்தமிழ் புரிந்த நான்"


அன்பும், அது ஈனும் ஆர்வமுடைமையும், நெகிழ்ந்து உருகுகிற சிந்தையையும் அளித்தது தமிழ். அதனால் நாரணற்கு ஞானஒளி விளக்கு என்னால் ஏற்ற முடிந்தது என்கிறார் ஆழ்வார் பெருமான்.


இக்கருத்துக்கு எழுபத்து நாலாம் பாடலில் மேலும் அசைக்க முடியாத உறுதி சேர்க்கிறார் பூதத்தாழ்வார். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற தமிழ்விடு தூது ஆசிரியருக்கு வழிகாட்டியாக “இருந்தமிழ்” என்ற சொல்லாட்சியும் “பெருந்தமிழன் யானே” என்ற மட்டிலாப் பெருமையையும் இப்பாடலில் காணக் கிடைக்கின்றன.


“யானேதவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்

யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே

இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்

பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”


”நானே சிறந்த தமிழன்; தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன்; தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். ஒப்பற்ற தமிழிலே நல்ல பாமலை உன் திருவடிகளிலே சூடத்தக்கதாகக் கூறினேன்” என்பதே இப்படலின் பொருள் அல்லவா!


திருமால் நெறியோடு இவ்விரு பாடல்கள் நமக்குத் தருகின்ற வாழ்வியல் அறிவுரை, ”தமிழை விரும்பிப்படியுங்கள்; அறிவு பெறலாம்! தமிழர் பண்பாட்டினை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழலாம்! நல்ல மனிதனாகவும் வாழலாம்!” என்பதே.


"ஞானத் தமிழ் புரிந்த யானே பெருந்தமிழன்; நல்லேன்’ என்று ஆழவார் கூறும் பெருமிதம் நெஞ்சைக்கவர்கிறது. எல்லோரும் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியுமா? 


"ஞானமொழி" எதுவென உலகுக்கு ஓங்கி உணர்த்துவது ஆழ்வாரின் வாக்கு!

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

Please Visit FB: Vinaitheerthan Vino

Pl subscribe You Tube: சொ.வினைதீர்த்தான்

And S.Vinaitheerthan

 உப்பு ஏன் உவமை!!!! :) 

................................

உப்பு உவமை ஏன்? ஏன்? ஏன்? .......................................

உப்பு, சர்க்கரை, ஒளிவிளக்கு அனைத்தையும் இணைத்து இனிய சமூக வாழ்வின் நோக்கம் அறியலாம். உப்பும், இனிப்பும் ஒரு பண்டத்திற்கு ஊட்டுகிற சுவையை எண்ணி ஒவ்வொருவருடைய வாழ்விலும், ஒவ்வொரு நிகழ்விலும் நாம் எவ்வாறு வாழ்வின் சுவையை அதிகரிக்கும், மாந்தரின் மதிப்பினைக் கூட்டும் ஒருவராக விளங்கலாம் என்பதினை உணர்ந்து செயலாற்றுவதே நாம் வாழ்கிற பயனுறு வாழ்வு! எங்கும் இருக்கிற இருட்டைச் சபிக்காமல் இயன்ற அளவில் ஒளியைப் பிறர் வாழ்வில் ஏற்றிவைப்பதே நம் மனம்  நிறைவடைவதற்கும் வாழ்வு மேம்படவும் வழி!

https://m.facebook.com/story.php?story_fbid=4358969564137083&id=100000722463448

வள்ளுவன் ஊடலுக்கு உப்பை உவமையாகக் கூறினார். உவமை சொல்லுவதிலும், ஈடு கூறுவதிலும் வள்ளுவருக்கு நிகர் ஒருவரும் இலர்.

கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள தொடர்பு "உயிருக்கும் உடலுக்கும்" உள்ள தொடர்பு என்கிறார்.

"உடம்பொடு உயிரிடையன்ன மற்றுஎன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு" (1122) 

இணையின் (Pair) உச்சத்திற்கு "உயிர், உடம்பு" இணையை விடவும் வேறு எடுத்துக்காட்டு எதுவும் எவராலும் தந்துவிட முடியாது.

அதே போல ஊடலுக்கு உப்பினை உவமையாக்கியது எண்ணியெண்ணி இன்புறத்தக்கது! "ஊடலும் கூடலும்" கோவலர்க்கு மாதவி நல்கினானாம். அதனால் அவன் "விடுதல் அறியா விருப்பினன்" ஆனான் என்கிறார் இளங்கோ அடிக்கள்!

"உப்பில்லா பண்டம் குபையிலே" என்பார்கள். சுவையற்றது. ஆயின் உப்பு மிகுந்துவிட்டால் அப்போதும் பயன்படாது துன்பமே! 

"உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்" (1302)

ஊடலை நீள விடாது தோற்றுக் கூடி முயங்கி இருவரும் வாழ்வில் வென்றவராக (WIN WIN) வேண்டும் என்பது வள்ளுவம் காட்டும் காதல் நெறி! (ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் 1327)

சுவைகள் அறு சுவை அறிவோம். ஆறு சுவையையும் அளிக்கிற பொருட்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் ஏன் ஊடலுக்கு உவமையாக வள்ளுவர் உப்பினைக் காட்டினார்? :) 

புளிப்பினைக் காட்டியிருக்கலாமே! புளிக்கு நிறம் உண்டு. பிறவும் அவ்வாறே. அவை சேர்ந்ததின் நிறத்தை மாற்ற வல்லவை. புளி புதியதில் சிவப்பாகவும் நாட்படக் கருப்பாகவும் விளங்கும். தான் சேர்ந்த உணவுப் பண்டத்தின் நிறத்தை மாற்றிக் காட்டும்.

ஆனால் "உப்பு" ஒரு பண்டத்துடன் சேரும்போது வண்ணத்தை மாற்றாது. உப்பு அதனுடன் கலந்திருப்பது வெளியில் தெரியாது. அதுபோல ஊடல் அகவாழ்வு சார்ந்தது. தம்பதியரிடம் உள்ள ஊடல், பூசல் வெளியில் தெரியக்கூடாதது!

அது இருவருக்கும் மட்டுமேயானது. அகவாழ்வு வெளியே பிறருக்குத் தெரியக் கூடாதது என்பதினை வலியுறுத்தவே நிறம் காட்டாத உப்பு ஊடலுக்கு உவமையாயிற்று.

இன்று பல மன வேறுபாடுகளுக்கு, மண முறிவுகளுக்குக் காரணம் அகவாழ்வுப் பூசல் நீண்டு வெளியில் ஆணின் தாய்க்கும் பெண்ணின் பெற்றோருக்கும் பரவி ஊதி ஊதிப் பெரிதாக்கப்படுவதே!

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி எஞ்ஞான்றும் பெருமை உடையது. நேர்வழி காட்டுவது! நிகரற்றது!!


வாழ்த்துகள்

சொ.வினைதீர்த்தான்

Please subscribe You tube:

சொ.வினைதீர்த்தான்

S.Vinaitheerthan