திங்கள், 17 மே, 2021

 உப்பு ஏன் உவமை!!!! :) 

................................

உப்பு உவமை ஏன்? ஏன்? ஏன்? .......................................

உப்பு, சர்க்கரை, ஒளிவிளக்கு அனைத்தையும் இணைத்து இனிய சமூக வாழ்வின் நோக்கம் அறியலாம். உப்பும், இனிப்பும் ஒரு பண்டத்திற்கு ஊட்டுகிற சுவையை எண்ணி ஒவ்வொருவருடைய வாழ்விலும், ஒவ்வொரு நிகழ்விலும் நாம் எவ்வாறு வாழ்வின் சுவையை அதிகரிக்கும், மாந்தரின் மதிப்பினைக் கூட்டும் ஒருவராக விளங்கலாம் என்பதினை உணர்ந்து செயலாற்றுவதே நாம் வாழ்கிற பயனுறு வாழ்வு! எங்கும் இருக்கிற இருட்டைச் சபிக்காமல் இயன்ற அளவில் ஒளியைப் பிறர் வாழ்வில் ஏற்றிவைப்பதே நம் மனம்  நிறைவடைவதற்கும் வாழ்வு மேம்படவும் வழி!

https://m.facebook.com/story.php?story_fbid=4358969564137083&id=100000722463448

வள்ளுவன் ஊடலுக்கு உப்பை உவமையாகக் கூறினார். உவமை சொல்லுவதிலும், ஈடு கூறுவதிலும் வள்ளுவருக்கு நிகர் ஒருவரும் இலர்.

கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள தொடர்பு "உயிருக்கும் உடலுக்கும்" உள்ள தொடர்பு என்கிறார்.

"உடம்பொடு உயிரிடையன்ன மற்றுஎன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு" (1122) 

இணையின் (Pair) உச்சத்திற்கு "உயிர், உடம்பு" இணையை விடவும் வேறு எடுத்துக்காட்டு எதுவும் எவராலும் தந்துவிட முடியாது.

அதே போல ஊடலுக்கு உப்பினை உவமையாக்கியது எண்ணியெண்ணி இன்புறத்தக்கது! "ஊடலும் கூடலும்" கோவலர்க்கு மாதவி நல்கினானாம். அதனால் அவன் "விடுதல் அறியா விருப்பினன்" ஆனான் என்கிறார் இளங்கோ அடிக்கள்!

"உப்பில்லா பண்டம் குபையிலே" என்பார்கள். சுவையற்றது. ஆயின் உப்பு மிகுந்துவிட்டால் அப்போதும் பயன்படாது துன்பமே! 

"உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்" (1302)

ஊடலை நீள விடாது தோற்றுக் கூடி முயங்கி இருவரும் வாழ்வில் வென்றவராக (WIN WIN) வேண்டும் என்பது வள்ளுவம் காட்டும் காதல் நெறி! (ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும் 1327)

சுவைகள் அறு சுவை அறிவோம். ஆறு சுவையையும் அளிக்கிற பொருட்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் ஏன் ஊடலுக்கு உவமையாக வள்ளுவர் உப்பினைக் காட்டினார்? :) 

புளிப்பினைக் காட்டியிருக்கலாமே! புளிக்கு நிறம் உண்டு. பிறவும் அவ்வாறே. அவை சேர்ந்ததின் நிறத்தை மாற்ற வல்லவை. புளி புதியதில் சிவப்பாகவும் நாட்படக் கருப்பாகவும் விளங்கும். தான் சேர்ந்த உணவுப் பண்டத்தின் நிறத்தை மாற்றிக் காட்டும்.

ஆனால் "உப்பு" ஒரு பண்டத்துடன் சேரும்போது வண்ணத்தை மாற்றாது. உப்பு அதனுடன் கலந்திருப்பது வெளியில் தெரியாது. அதுபோல ஊடல் அகவாழ்வு சார்ந்தது. தம்பதியரிடம் உள்ள ஊடல், பூசல் வெளியில் தெரியக்கூடாதது!

அது இருவருக்கும் மட்டுமேயானது. அகவாழ்வு வெளியே பிறருக்குத் தெரியக் கூடாதது என்பதினை வலியுறுத்தவே நிறம் காட்டாத உப்பு ஊடலுக்கு உவமையாயிற்று.

இன்று பல மன வேறுபாடுகளுக்கு, மண முறிவுகளுக்குக் காரணம் அகவாழ்வுப் பூசல் நீண்டு வெளியில் ஆணின் தாய்க்கும் பெண்ணின் பெற்றோருக்கும் பரவி ஊதி ஊதிப் பெரிதாக்கப்படுவதே!

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி எஞ்ஞான்றும் பெருமை உடையது. நேர்வழி காட்டுவது! நிகரற்றது!!


வாழ்த்துகள்

சொ.வினைதீர்த்தான்

Please subscribe You tube:

சொ.வினைதீர்த்தான்

S.Vinaitheerthan

கருத்துகள் இல்லை: